மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் வெள்ள பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை

0
115

மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிக அதிக வெள்ளநீர் வெளியேற்றப்படும்போது, ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது.

அதன்படி, மணலி மண்டலம் மாத்தூர் பாலசுப்பரமணி நகர், சடையான்குப்பம், கோடம்பாக்கம் மண்டலம் கானுநகர், காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலம், வளசரவாக்கம் மண்டலம் போரூர், அடையார் மண்டலம் கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இவற்றில் சென்னை மாநகராட்சி, வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பங்கேற்றன.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக வரும்போது தாழ்வான பகுதிகளில் வசிப்போரை வெளியேற்றுதல், படகு மூலம் மீட்டு வருதல், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கியிருக்கும் கர்ப்பிணிகள், முதியவர்களை பாதுகாப்பாக மீட்டு வருதல் போன்ற ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, வெள்ளநீர் சூழும் குடியிருப்புகளில் உள்ளவர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்தல், மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை வழங்குதல், நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்லுதல், நிவாரண மையத்தில் தேவையான உணவுப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருத்தல், மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகைகள் பார்க்கப்பட்டன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here