Home மாநில செய்திகள் காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு: வஞ்​சிரம், இறால் மீன்களின் விலை குறைந்தது

காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு: வஞ்​சிரம், இறால் மீன்களின் விலை குறைந்தது

0

சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. அதனால் பெரிய மீன்களின் விலை குறைந்தது. கடலில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஏப். 15-ம் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அன்றுமுதல் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

இதன் காரணமாக பெரிய மீன்கள் வரத்து இல்லாமல் வஞ்சிரம், கொடுவா, மயில் கோலா உள்ளிட்ட மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. அரபிக் கடலில் பிடிக்கப்பட்ட மீன்கள் கொண்டுவரப்பட்டன.

அதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.750 வரை விற்கப்பட்ட வஞ்சிரம், ரூ.1500 வரை உயர்ந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் உள்ள மீன் அங்காடியில் மீன் வாங்க ஆளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூன் 14-ம் தேதி இரவு மீன்பிடி தடைக்காலம் முடிந்து, விசைப்படகு மீனவர்கள், அன்று இரவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதனால் நேற்று காசிமேட்டில் மீன்கள் வரத்து அதிகமாக இருந்தது. மக்கள் கூட்டமும் அலை மோதியது. அதிக அளவில் பெரிய மீன்கள் வந்திருந்ததால், அவற்றின் விலையும் குறைந்திருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.800, ஷீலா ரூ.450, சங்கரா ரூ.300, இறால் ரூ.300, நெத்திலி ரூ.150 என விலை குறைந்திருந்தது. இது மீன் பிரியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version