முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 3-வது நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 492 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் குவித்திருந்த முன்னாள் வீரரான அலாஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார்.
முல்தான் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷான் மசூத் 151, சல்மான் ஆகா 104, அப்துல்லா ஷபிக் 102 சவுத் ஷகீல் 82 ரன்கள் விளாசினர். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. ஸாக் கிராவ்லி 64 ரன்களும், ஜோ ரூட் 32 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஸாக் கிராவ்லி 85 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன 78 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 75 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன 84 ரன்கள் சேர்த்த நிலையில் அமீர் ஜமால் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக், ஜோ ரூட்டுடன் இணைந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 167 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் தனது 35வது சதத்தை கடந்தார். மறுபுறம் மட்டையை சுழற்றிய ஹாரி புரூக் 118 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவருக்கு 6-வது சதமாக அமைந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 492 ரன்கள் குவித்தது.
ஜோ ரூட் 277 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 176 ரன்களும், ஹாரி புரூக் 173 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 141 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 4-வது ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது இங்கிலாந்து அணி.
நேற்றைய ஆட்டத்தில் ஜோ ரூட் 71 ரன்களைஎட்டிய போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்திருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் அலாஸ்டர் குக்கின் சாதனையைமுறியடித்தார். டெஸ்ட் அரங்கில் அலாஸ்டர் குக் 12,472 ரன்கள் சேர்த்திருந்தார். குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45.35 சராசரியுடன் 12,472 ரன்கள் சேர்த்திருந்தார். ஜோரூட், தனது 147-வது டெஸ்ட் போட்டியிலேயே 50.62 சராசரியுடன் இந்த மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.
33 வயதான ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் 4 இடங்களில் சச்சின் டெண்டுல்கர் (15,921), ரிக்கி பாண்டிங் (13,378), ஜாக் காலிஸ் (13,289), ராகுல் திராவிட் (13,288) ஆகியோர் உள்ளனர். ஜோ ரூட் 12,578 ரன்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.