அமெரிக்க நாட்டின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ விருதை கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதை பெற்ற முதல் கால்பந்தாட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
கடந்த 1963 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் வளர்ச்சி, பாதுகாப்பு, சமூக பங்களிப்பு மற்றும் உலக அமைதி அல்லது தனிநபர்களின் சமூக செயல்பாடு போன்றவற்றை ஈடுபட்டு வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 19 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஹிலாரி கிளிண்டன், டென்சல் வாஷிங்டன் ஆகியோருடன் மெஸ்ஸிக்கும் இந்த விருது வழங்குவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. சனிக்கிழமை அன்று இந்த விருதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார். இருப்பினும் இதில் மெஸ்ஸி பங்கேற்கவில்லை. ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சில நிகழ்வுகள் காரணமாக இதில் பங்கேற்க முடியவில்லை என மெஸ்ஸி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
“வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்ட மெஸ்ஸி, இந்த விருதை பெறுவதை கவுரவமாக கருதுவதாகவும், இந்த அங்கீகாரத்தை பெற்றது தனது பாக்கியம் என்றும் கூறினார். இருப்பினும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சில பணிகள் காரணமாக தன்னால் இதில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்” என மெஸ்ஸி விளையாடி வரும் கால்பந்து கிளப் அணியான இண்டர் மியாமி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயதான மெஸ்ஸி, கடந்த 2005 முதல் சர்வதேச அளவில் அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறார். தன் அணிக்காக சர்வதேச களத்தில் 191 கோல்களை பதிவு செய்துள்ளார். கடந்த 2023 முதல் இண்டர் மியாமி கிளப் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 8 முறை Ballon d’Or விருதை வென்றுள்ளார். பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2014 மற்றும் 2022-ல் கோல்டன் பால் விருதை வென்றுள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிக்கோவில் நடைபெற உள்ள பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.














