ஆந்திர மாநில நிதித்துறை கட்டிடத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர்கள், சில முக்கிய ஆவணங்கள் கருகியதாக தெரியவந்துள்ளது.
அமராவதியின் மங்களகிரி பகுதியில் ஆந்திர மாநில முதன்மை நிதித்துறை அலுவலகமான ‘நிதி பவன்’ உள்ளது. இங்கு நேற்று காலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த 6 அடுக்கு கட்டிடத்தின் 4 மற்றும் 5-வது தளங்களில் சென்ட்ரல் ஏசியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. உடனே மளமளவென தீ பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெறியேறினர்.
தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் பல கம்ப்யூட்டர்கள், சில முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியதாக தெரியவந்துள்ளது. இதனால் சிறிது நேரம் ஆன்லைன் சேவை முடங்கியது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.