சென்னையில் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டினால் டன்னுக்கு ரூ.5,000 அபராதம்

0
20

பொது இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டி​னால் வாக​னம் பறி​முதல் செய்​யப்​படு​வதுடன், டன்​னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்​கப்​படும் என மாநக​ராட்சி ஆணை​யர் குமரகுருபரன் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக மண்டல உதவி ஆணை​யர்​களுக்கு அவர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னையின் முக்​கிய சாலைகள், தெருக்​கள், நடை​பாதைகள், நீர்​நிலைகள், திறந்​த வெளி​கள் மற்​றும் காலி இடங்​களில் கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​வது மாநக​ராட்சி கவனத்​துக்கு வந்​துள்​ளது.

இத்​தகைய செயல்​களால் போக்​கு​வரத்​துக்கு இடையூறு ஏற்​படு​வதுடன் காற்று மாசு​பாடு, வெள்ள அபா​யம் மற்​றும் விபத்​துகள் போன்ற பொதுச் சுகா​தார பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன.

இதை தடுக்​கும் வகை​யில் ‘சுத்​த​மான மற்​றும் பாது​காப்​பான கட்​டு​மானத்​துக்​கான வழி​காட்​டு​தல்​கள் – 2025’ மற்​றும் ‘கட்​டு​மானம் மற்​றும் இடி​பாட்டு கழி​வு​கள் மேலாண்​மைக்​கான வழி​காட்​டு​தல்​கள் – 2025’ ஆகிய​வற்​றின்படி புதிய வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, பொது இடங்​களில் அங்​கீ​காரமின்றி கட்​டு​மானக் கழி​வு​களை கொட்​டும் வாக​னங்​களை அமலாக்​கக் குழு​வினர் கண்​டறிந்​தால், அந்த வாக​னங்​கள் உடனடி​யாக பறி​முதல் செய்​யப்​படும்.

குற்​றச் செயலில் ஈடு​பட்ட வாக​னத்​தின் படங்​கள் மற்​றும் கொட்​டப்​பட்ட கழி​வு​களின் விவரங்​கள் ஆதா​ரங்​களு​டன் செல்​போன் செயலி​யில் பதிவேற்​றப்​பட்​டு, கொட்​டப்​படும் கழி​வு​களின் அளவு அடிப்​படை​யில் ஒரு டன்​னுக்கு ரூ.5,000 வீதம் அபராதம் விதிக்​கப்​படும்.

விதிக்​கப்​பட்ட முழு அபராதத்​தை​யும் செலுத்​திய பின்​னரே பறி​முதல் செய்​யப்​பட்ட வாக​னங்​கள் விடுவிக்​கப்​படும். சென்னை மாநக​ராட்​சி​யின் 15 மண்​டலங்​களி​லும் இந்த உத்​தரவு உடனடி​யாக நடை​முறைக்கு வரு​கிறது.

எனவே, கட்​டு​மான நிறு​வனங்​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் பொது​மக்​கள் தங்​களின் கட்​டிடக் கழி​வு​களை மாநக​ராட்​சி​யால் நிர்​ண​யிக்​கப்​பட்ட அங்​கீகரிக்​கப்​பட்ட மறுசுழற்சி அல்​லது சேகரிப்பு மையங்​களில் மட்​டுமே ஒப்​படைக்க வேண்​டும்.

விதி​மீறலில் ஈடு​படு​வோர் மீது எவ்​வித வி​தி​விலக்​கும் இன்றி கடுமை​யான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here