அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்கும் எஸ்ஐடியின் முடிவுகள் கசிந்து விட்டதாக அயோத்தி சமாஜ்வாதி எம்.பி. அவதேஷ் பிரசாத் புகார் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உ.பி.யின் ஆளும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன. தீவிரமான கேள்விகளை எழுப்பி வருகின்றன. அயோத்தி தொகுதி சமாஜ்வாதி எம்.பி.யான அவதேஷ் பிரசாத் எஸ்ஐடி மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவதேஷ் பிரசாத் கூறியதாவது: ராமர் கோயில் காணிக்கை திருட்டின் விசாரணைக்கு இனி எந்த அர்த்தமும் இல்லை. அதன் முடிவுகள் ஏற்கெனவே கசிந்துவிட்டன. நான் இதை என் சொந்தக் கருத்தாகச் சொல்லவில்லை. முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய எஸ்ஐடி அறிக்கையின் அடிப்படையிலேயே பேசுகிறேன். இப்போது அந்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகிவிட்டதால், இந்த விசாரணையின் நோக்கமே சிதைந்துவிட்டது.
ராமர் கோயில் காணிக்கை திருட்டு என்பது கோடிக் கணக்கான ராம பக்தர்களின் நம்பிக்கையின் மீதான தாக்குதல். இதில் பக்திக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுடன் ஒரு பெரிய விளையாட்டு விளையாடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரே வழிதான் உள்ளது. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் முன்வந்து ஒரு குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவின் விசாரணையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
