மேற்குவங்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் போராட வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகரில் நேற்று நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒரு கண்ணில் துரியோதனனும் மறுகண்ணில் துச்சாதனனையும் பார்க்கலாம். அவர் மிகவும் ஆபத்தானவர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது. வங்கதேச மக்களை முகாம்களில் அடைப்போம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுக்கிறார். பாஜகவுக்கு ஆதரவான மத்திய அரசின் மூத்த அரசு அதிகாரிகள் மேற்குவங்கத்தில் முகாமிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றனர்.
நான் இதுவரை எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. எனது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எஸ்ஐஆர் என்ற பெயரில் மேற்குவங்க பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஒருவேளை வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டால், சமையல் பாத்திரங்களுடன் பெண்கள் போராட தயாராக இருக்க வேண்டும். முன்வரிசையில் பெண்களும், அவர்களுக்கு பக்கபலமாக பின்வரிசையில் ஆண்களும் களமிறங்க வேண்டும்.
தூய்மை, மனிதாபிமானம், அமைதியை பகவான் கிருஷ்ணர் போதித்தார். வன்முறை, பிரிவினையை அவர் போதிக்கவில்லை. சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மக்களிடையே ஒற்றுமையை வளர்த்தனர். அவர்கள் ஒருபோதும் பிரிவினையை தூண்டவில்லை.
நாட்டின் சுதந்திரத்துக்காக மேற்குவங்க மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். ஆனால் இப்போது எஸ்ஐஆர் மூலம் மாநில மக்களின் குடியுரிமை கேள்விக்குறியாகி இருக்கிறது. சாதாரண வங்க புலியைவிட, அடிபட்ட வங்க புலி ஆக்ரோஷமானது. நீங்கள் எங்களை தாக்கினால் எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அநீதியை தடுத்து நிறுத்துவோம். இந்த நேரத்தில் பொது மக்கள் யாரும் எல்லை பாதுகாப்பு படையின் நிலைகளுக்கு செல்ல வேண்டாம். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அவர் பேசினார்.







