மோஸ்ட் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முறை சீட் இருக்காது என தேனாம்பேட்டைக் கட்சி தலைமையிலிருந்தே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரேக்கிங் நியூஸை போட்டு விடுகிறார்களாம்.
‘மத்திய’ விசாரணை வளையங்களுக்குள் எக்குத் தப்பாய் மாட்டி இருக்கும் மூத்த முன்னோடிகள் சிலருக்கு மீண்டும் சீட் கொடுத்தால் டெல்லி பார்ட்டிகள் தேவையற்ற குடைச்சல் கொடுத்து தேர்தல் நேரத்தில் குண்டுக் கட்டாய் தூக்கி வைத்து கூட்டணியின் வெற்றிக்கு குண்டுவைக்கப் பார்ப்பார்கள் என்ற அச்சப்படுகிறதாம் தேனாம்பேட்டைத் தலைமை. அதனால், மோஸ்ட் சீனியர்கள் சிலருக்கு ‘விசாரணை வில்லங்கங்களை’ காரணம் காட்டி இம்முறை சீட் கொடுக்க வேண்டாம் என தீர்மானித்திருக்கிறதாம்.
இந்தச் செய்தி காத்துவாக்கில் கசிந்ததற்கே ‘புரத்துக்’காரர் சென்னைக்குப் புறப்பட்டு வந்து, “இன்னிக்கு வந்த கரூர் கம்பெனிக்காரங்களுக்கு ஒரு நியாயம்… காலங்காலமா கட்சிக்காக உழைச்சுட்டு நிக்கிற எங்களுக்கு ஒரு நியாயமா? ஏடாகூடமா ஏதாச்சும் முடிவெடுத்து கட்சியை கொண்டுபோய் முட்டுச் சந்துல நிறுத்திடாதீங்க” என்று எகிறிவிட்டுப் போனாராம்.
இதன் பிறகுதான் கட்சியின் தலைமை பீடத்தில் சில பல ‘சிறப்பான’ மாற்றங்கள் நிகழ்ந்ததாம். இருந்த போதும் “நாளைக்கி, சீட்டுக் கேட்டு வந்து நிக்கக் கூடாதுன்னு தான் சிலபேருக்கு தலைமைப் பதவிகளை தாராளமா குடுத்து காம்ப்ரமைஸ் பண்ணிருக்காங்க” என்கிறார்கள் தலைமை பீட வட்டாரத்தில்.














