முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினத்தையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சிறுவயதுப் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உருக்கமாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தனது தந்தையின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பா, நீங்கள் கண்ட கனவின் படி, திறமையான, வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கான பொறுப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன். உங்களது போதனைகளும், நெறிகள், நினைவுகளும் என்னுடன் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான ‘வீர் பூமி’யில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின் போது பிரியங்கா காந்தியின் பிள்ளைகளான மிராயா மற்றும் ரெய்ஹான் வதேராவும் உடனிருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் கார்கே, ராஜீவ் காந்தியை ‘இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்’ என்று போற்றியதோடு, நவீன இந்தியாவை வடிவமைக்க அடித்தளமிட்டவை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியா ஒரு தொன்மையான நாடு, அதே வேளையில் இளமையான தேசம். வலிமையான, சுதந்திரமான, சுயசார்புடைய, உலக நாடுகளின் வரிசையில் முதன்மையான மற்றும் மனிதகுலத்திற்குச் சேவை செய்யும் ஒரு இந்தியாவையே நான் கனவு காண்கிறேன்” என்ற ராஜீவ் காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளை இங்கு நினைவு கூர்கிறேன்.
மேலும், அவரது தியாக திருநாளில், நாட்டின் கோடிக் கணக்கான மக்களிடையே நம்பிக்கையையும் லட்சியத்தையும் விதைத்த இந்தியாவின் சிறந்த புதல்வரான பாரத ரத்னா ராஜீவ் காந்திக்கு நமது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்” என்றும் கார்கே தெரிவித்துள்ளார்.
