ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள், ஃபாலோயர்ஸ்களுக்கு நானும் மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த பரஸ்பர முடிவு. நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். இருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகள் இருக்கும், பரஸ்பர ஒப்புதலுடன் பிரிந்து செல்வதே சிறந்த வழி என முடிவு செய்துள்ளோம்.
இருப்பினும் நாங்கள் இருவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்போம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறோம். அது எப்போதும் தடைபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்களின் முடிவுக்கு மதிப்பளிக்குமாறும், எந்த முன்முடிவும் இல்லாமல் அணுகவும் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த மோஹினி தே அடிப்படையில் ஒரு பேஸ் கிட்டாரிஸ்ட். உலக அளவில் நடைபெற்ற 40-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளில் பேசிசிட் ஆக ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. 2023-ல் தனி ஆல்பத்தை அவர் வெளியிட்டார். இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் மோஹினி என்பது குறிப்பிடத்தக்கது.














