மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு என்ற இடத்தில் உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் முன்புறம் சுமார் நூறாண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று காணப்பட்டது. இந்த மரத்தின் கீழ் பகுதியில் இருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து வளர்ந்து நின்றது.
இதில் ஒரு கிளை நேற்று(செப்.22) மாலை திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் மார்த்தாண்டத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
உடனடியாக உண்ணாமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜோசலின் ராஜ் சம்பவ இடம் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் மரம் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.