நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி.ஜெபி மாத்தர் ஹிஷாம் நேற்று பேசியதாவது: கேரள மாநிலம் கோழிக்கோடு, திருச்சூர், திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக அளவில் போலி மருந்துகள் புழக்கம் குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
இது ஒரு சிறிய தவறு அல்ல. இந்த சோதனைகள் கேரள மருந்து கட்டுப்பாட்டு துறையின் முழுமையான தோல்வியை, திறமையின்மையை அம்பலப்படுத்துவதாக உள்ளது. மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையின் அலட்சியத்தால் போலியான மற்றும் தரமற்ற மருந்துகள் கேரள சந்தைக்குள் நுழைந்துள்ளன. இதில், மருந்து உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களுடன் மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மாநில சுகாதார உள்கட்டமைப்பில் ஏகப்பட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன. அடிப்படையான அறுவை சிகிச்சைகளுக்கு கூட உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அறுவை சிகிச்சைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பாடின்றி மூடிக் கிடக்கின்றன நோயாளிகள் தங்களது சொந்தப் பணத்தில் மருத்துவப் பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கும் அவலத்துக்கும் ஆளாகியுள்ளனர். நிர்வாக திறனற்ற மாநில அரசின் செயல்பாடுகளுக்கு இதுவே சாட்சி.
இந்த சூழ்நிலையில், மாநிலத்தின் வெளிப்படை தன்மையை மீட்டெடுக்கவும், மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யவும் கேரளாவின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும். இவ்வாறு ஹிஷாம் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த கருத்துக்கு கேரள மாநில ஆளும் சிபிஐ (எம்) கட்சியின் எம்.பி.ஜான் பிரிட்டாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த உறுப்பினரும் சபையை தவறாக வழிநடத்த அனுமதிக்க முடியாது. அனைத்து போலி மருந்துகளும் எங்கோ ஓர் இடத்தில் தயாரிக்கப்பட்டு கேரளாவுக்கு கொண்டு வரப்படுகிறது. போலி மருந்துகளை கண்டறிவதில் மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.







