இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும் இந்திய சுவிசேஷ திருச்சபை (இசிஐ) பேராயருமான எஸ்றா சற்குணம் (86), வயது மூப்பு காரணமாக கடந்த 22-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. எஸ்றா சற்குணத்தின் மூத்த மகள் வெளிநாட்டில் இருந்ததால், இறுதிச் சடங்கு 26-ம் தேதி (நேற்று) நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, அவரின் இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. இதையொட்டி, வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்துக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எஸ்றா சற்குணத்தின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
ராயர் சற்குணத்தின் மகள் கதிரொளி மாணிக்கத்திடம் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக இரங்கலை தெரிவித்தார். பின்னர் மதியம் 2 மணிக்கு மேல், இசிஐ பேராயர்கள் தலைமையில் அடக்க ஆராதனைகள் நடைபெற்றன. இதற்கிடையே, எஸ்றா சற்குணத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாலை 4 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள இறையியல் கல்லூரி வளாகத்தில் இருந்து சற்குணத்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.