நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” சுரண்டலுக்கு மறுபெயராக திரிணமூல் காங்கிரஸ் மாறிவிட்டது” என்று கடுமையாக சாடினார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: அடித்தட்டில் உள்ள மக்களுக்காக வேரூன்றியிருப்பதாக பேசிக் கொள்ளும் திரிணமூல் காங்கிரஸ் தற்போது அம்மக்களின் உரிமைகளை மறுப்பது மற்றும் துன்புறுத்துவதின் அடையாளமாக மாறியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் ஊழலை நிறுவனமயமாக்கியுள்ளது, நிறுவனங்களை அழித்துவிட்டது. சுரண்டலின் ஒரு சொல்லாக அது மாறிவிட்டது.
மற்ற மாநிலங்களைப் போலவே மேற்கு வங்கத்திலும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டமான பிஎம்ஏஒய்-ஜி திட்டம் 2016-17 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மத்திய அரசின் பங்காக இதுவரை ரூ.25,798 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இருப்பினும், அந்த திட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. தகுதியற்ற குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, 100 நாள் வேலைதிட்டத்திலும் 25 லட்சம் போலி அட்டைகளை அச்சடித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் முறைகேடு செய்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அடிமட்டத்தில் வாழும் ஏழைகளுக்கு மருத்துவம் மறுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் முதலீடு உருவாக்கம் 6.7%-லிருந்து 2.9%-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டின் மீதான உங்களது விரோத போக்கின் நேரடி விளைவு, வேலைவாய்ப்பு, தொழிற்சாலை உருவாக்கத்தை மாநிலத்தில் தட்டி பறித்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அக்டோபர் 2024 முதல் ஜனவரி 2025-க்கு இடையில் 3.3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு, உள்நாடு மட்டுமின்றி பல வெளிநாட்டு காரணிகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், ஆசிய கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு குறைவாகவே உள்ளது.
குறிப்பாக, தென் கொரியா, இந்தோனேசியா கரன்சிகள் முறையே 8.1 சதவீதம் மற்றும் 6.9 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன.
சர்வதேச சூழல் கடந்த 10 ஆண்டுகளில் 180 டிகிரி கோணத்துக்கு மாறியுள்ளது. எனவே, பட்ஜெட் தயாரிப்பு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சவாலானதாக உள்ளது . இவ்வாறு நிதியமைச்சர் பேசினார்.














