ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம்: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

0
183

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக, தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினராக தேர்வானவர் திருமகன் ஈவேரா. இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவர் கடந்த டிச.14-ம் தேதி மறைந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் மறைந்தால், அவரது இறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதும், சட்டப்பேரவை செயலகம், தொகுதி காலியாக இருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மூலம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். இதையடுத்து, தேர்தல் ஆணையம் தொகுதி காலியானதாக அறிவித்து, அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தும்.

அந்தவகையி்ல், இளங்கோவன் மரணத்தை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சில தினங்களில் தொகுதி காலியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

பிப்ரவரியில் தேர்தல்: இதன் மூலம், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த தேர்தலுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், இத்தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், திமுக சார்பில் சந்திரகுமாரும் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here