Home மாநில செய்திகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

0

வாக்காளர்களுக்கு பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீவிர பக்தராக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விளங்குகிறார். ஆனால், அவர் இருக்கும் இடம் சரியானதாக இல்லை. அதனால்தான் முருக பக்தர்கள் மாநாட்டை ‘சங்கிகள் மாநாடு’ என்று அவர் விமர்சனம் செய்து வருகிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்திருக்க வேண்டும். அப்போதுதான் யார் அந்த சார்? என்பதற்கான விடை கிடைத்திருக்கும். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததே தவறானது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரத்தநாடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. இந்த அனைத்து வழக்குகளும் 157 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளதா? அனைத்து வழக்குகள் மீதும் தமிழக முதல்வர் அக்கறை காட்டினால் நன்றாக இருந்திருக்கும்.

உங்கள் தாய்மொழி எது என்று ஸ்பெயின் நாட்டில் எம்.பி. கனிமொழியிடம் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவின் தேசிய மொழி குறித்து சரியான பதிலை கனிமொழி கூறியிருக்கிறார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சிறப்பானது. தேமுதிகவை கூட்டணிக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அழைத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. இதுபோன்று கட்சிகளை அழைப்பது வழக்கமான ஒன்றுதான்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முதலில் திருமங்கலம் பார்முலா என்று கூறினர். தற்போது பென்னாகரம் பார்முலா என்று கூறுகின்றனர். பெட்டி பெட்டியாக பணம் கொடுக்க ஆளுங்கட்சி தயாராகி வருவதாக, தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். முதலில் ஆயிரம் ரூபாய் தந்தார்கள். தற்போது ஐந்தாயிரம் ரூபாய் தருவதற்கு தயாராகி வருகிறார்கள். பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் திமுக வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. பாமக எங்கள் கூட்டணியில் தொடரும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version