“அதிமுகவுக்கு இருந்த சுதந்திரம் போய்விட்டது. தப்பித் தவறி அவர்கள் ஆட்சி அமைத்தால்கூட அந்த ஆட்சியை பாஜக தான் கட்டுப்படுத்தும்” என்று திருச்சி விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சியில் பங்கு கேட்பது என்பது புதுமையான கோரிக்கை கிடையாது. அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
தற்போது அனைவரின் கவனமும் தேர்தலில் வெற்றி பெறுவது தான். அதற்கு முன்பாக தொகுதி உடன்பாடு, தேர்தலில் வெற்றி பெறுவது என்று பல விஷயம் இருக்கிறது. வெற்றி பெற்று வந்த பின்பு மற்றவை குறித்து பேசிக் கொள்வோம்.
அதிமுகவுக்கு அன்றிருந்த சுதந்திரம் போய்விட்டது. தப்பித் தவறி அவர்கள் ஆட்சி அமைத்தால் கூட அந்த ஆட்சியை பாஜக தான் கட்டுப்படுத்தும். ஒவ்வொரு சீசனுக்கும் பறவைகள் வந்து செல்வது போல தற்போது தேர்தல் நேரத்தில் பிரதமரும், மத்திய அமைச்சர்களும் அடிக்கடி தமிழகம் வந்து செல்வார்கள். தமிழ் மொழி, கலாச்சாரம் உள்ளிட்டவை தான் எங்களுக்கு மிகவும் பிடித்தமானது என அவர்கள் பேசுவார்கள்.
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் வழங்குவது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் அந்தப் படத்தை பார்க்கப் போவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.







