மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பழனிசாமி கையெழுத்திட்ட படிவங்களை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் வா.புகழேந்தி, சூரியமூர்த்தி ஆகியோர் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 இடங்களுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே பழனிசாமி பொதுச்செயலாளரானது, அவர் பல்வேறு தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் படிவங்களில் கையெழுத்திட்டு வருவது தொடர்பாக வா.புகவேந்தி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கில், பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு இடைக்கால தடை பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, அனைத்து தரப்பினரிடமும் கேட்டறிந்து, உயர் நீதிமன்ற அமர்வு, தடையை நீக்கி, தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக புகழேந்தி உள்ளிட்ட புகார்தாரர்களை வரவழைத்து தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை நிலுவையில் உள்ளது. சிவில் நீதிமன்றத்திலும் பிரதான வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பழனிசாமி கையெழுத்திட்டு அளிக்கும் படிவங்களை ஏற்கக் கூடாது என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் வா.புகவேந்தி மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி ஆகியோர் நேற்று மனு ஒன்றை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
அதிமுக தொடர்பான பிரதான சிவில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அதன் தீர்ப்பு வராமல் ஏ மற்றும் பி படிவங்களை அதிமுக சார்பில் யாரும் கையெழுத்திட்டு உரிமை கொண்டாட முடியாது. உச்ச நீதிமன்றம் தற்காலிகமாகத்தான் ஈரோடு இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி அளித்தது. அதேநேரத்தில் வேறு எந்த தேர்தலுக்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆணை பிறப்பித்தது.
ஆனால் அதையும் மீறி கடந்த மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி அறிவித்த வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தவறாக வழங்கியது. இது உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிரானது. தேர்தல் ஆணையம் அவரை பொதுச்செயலாளர் என்று ஒப்புக்கொள்ளவில்லை. தான் பொதுச்செயலாளர் என்று அவரே கூறிக் கொள்கிறார். அவருக்கு தவறாக இரட்டை இலை சின்னத்தை வழங்கினால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமைந்து விடும்.
எனவே, மாநிலங்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு வழங்கக் கூடாது. மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அதிமுக பெயரில் பழனிசாமி கையெழுத்திட்ட ஏ மற்றும் பி படிவங்களை சமர்ப்பித்தால் அதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது.
அதேபோல் அதிமுக சார்பில் யார் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்துட்டு சமர்ப்பித்தாலும் அதனை ஏற்கக்கூடாது. பழனிசாமி அதிமுக பெயரை பயன்படுத்தி அறிவிக்கும் வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்க கூடாது. இதை மீறி தேர்தல் ஆணையம் சின்னத்தை பழனிசாமிக்கு வழங்கினால் உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உட்படுத்தப்படும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.














