இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் நேரடியாக விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார்.
விமான நிலைய வளாகத்தில் இந்திய வம்சாவளியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 1968-ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி நியூசிலாந்துக்கு சென்றார். கடந்த 1986-ம் ஆண்டில் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டார். இதன்பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை அவர் இன்று சந்தித்து அதிகாரப்பூர்வமாக பேச உள்ளார். அப்போது பாதுகாப்பு, கல்வி, அறிவியல் உட்பட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி இந்தியா, நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளின் பிரதமர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
