சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்களின் அடிப்படையில், சென்னையில் பல்வேறு ஆடிட்டர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை கோடம்பாக்கம் அண்ணா பிரதான சாலையில் உள்ள டைரக்டர்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்ராஜ் (37). பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு நேற்று காலை 8 மணி அளவில்காரில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல, திருவொற்றியூரில் வசிக்கும் ஆடிட்டர் சேகர் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர் ஆகியோரது வீடு உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.
எனினும், சோதனைக்கான காரணங்கள் குறித்து அமலாக்கத் துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சோதனை முழுமையாக முடிந்த பிறகு, அதற்கான காரணம், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரி விக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







