டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மே 22-ம் தேதி விசாரித்தது. அப்போது, அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் நடந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடியதாவது: அரசு நிறுவனத்தில் அமலாக்கத் துறை எப்படி சோதனை நடத்த முடியும்? டாஸ்மாக் இயக்குநர் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசே வழக்குப் பதிவு விசாரித்து வருகிறது.
இந்த வழக்குகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்யும். முறைகேடு வழக்குப் பதிவு செய்தால், உடனே அமலாக்கத் துறையும் பண மோசடி வழக்கைப் பதிவு செய்கிறது. கடந்த 2014 – 21 கால கட்டத்தில் டாஸ்மாக் விற்பனை கடைகளுக்கு எதிராக மாநில லஞ்ச ஒழிப்புத் துறை 47 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
ஆனால், 2025-ல் அமலாக்கத் துறை உள்ளே நுழைந்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தி, ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளது. அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கு விவரத்தை மாநில அரசிடம் சட்டப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், எந்த விவரத்தையும் அமலாக்கத் துறை பகிரவில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.
அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, இந்த விவகாரத்தில் பண மோசடியை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. டாஸ்மாக்கில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன’’ என வாதிட்டார்.
டாஸ்மாக் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிடும் போது, ‘‘டாஸ்மாக் தலைமையகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அதிகாரிகளின் செல்போன்களை அமலாக்கத் துறை எடுத்து சென்று தரவுகளை நகலெடுத்துள்ளது. இது வாழும் உரிமை, தனி மனித சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைக்கு எதிரானது’’ என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை அதிகாரத்தை உறுதி செய்த விஜய் மதன்லால் தொடர்பான வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனு விசாரணையில் உள்ளது. அந்த மேல்முறையீடு மனுக்கள் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை, அமலாக்கத் துறை விசாரணைக்கு விதித்த இடைக்கால தடையை உறுதி செய்து விசாரணையை நிறுத்தி வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.