நீதிமன்ற உத்தரவுப்படி திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கடசியினர் மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர்கள் இடத்தில் இருப்பதாகவும், அவற்றை மீட்டு கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
பல வருடங்களாக இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நிலங்களை தனி நபர்களிட மிருந்து மீட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல்வேறு காரணங்களாலும், பொதுமக்கள் எதிர்ப்பாலும் இப்பணி தாமதமானது.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 21 நாட்களுக்குள் கோயில் நிலங்களை மீட்டு சுவாதீனம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அறநிலையத் துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர்கள், அறநிலையத்துறை செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய குழுவினரும், வருவாய்த்துறை கூடுதல் வட்டாட்சியர் பார்வதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
பொக்லைன் இயந்திரம் மூலம் கோயில் நிர்வாகத்தின் பெயர் பலகையை வைக்க முற்பட்டபோது விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்திருந்தவர்கள், நிலங்களை அனுபவித்து வருபவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து தடுத்து நிறுத்தினர்.
இந்த விவசாய நிலங்கள் யாருக்கு சொந்தம் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பதாகவும், வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
இதனிடையே சிலர், விவசாய நிலங்களில் நடப்பட்ட கோயில் நிர்வாகத்தின் பெயர் பலகைகளை அடித்து உடைத்து, பேனர்களை கிழித்து எறிந்தனர். மேலும், ஏராளமான ஆண்களும், பெண்களும் நெம்மேலி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்குவது என்றும், அதற்குள் முடிவு ஏற்படவில்லை எனில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதை இரு தரப்பும் ஏற்று அதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டு கலைந்து சென்றனர்.



