தென்காசி: மலேசிய எம்.பி. பிரபாகரன், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மலேசியாவில் இந்தியர்களின்நலனுக்காக உருவாக்கப்பட்ட `மித்ரா’ என்ற சிறப்புக் குழு பிரதிநிதியாக, மலேசியப் பிரதமர் என்னைநியமித்துள்ளார். ரூ.10 கோடி நிதி ஒதுக்கி, மலேசியாவில் உள்ள 20 லட்சம் இந்தியர்களுக்கான பொருளாதார மற்றும் மறுமலர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதுதான் இந்த துறையின் நோக்கம்.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமுடன், சில மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்து, இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தோம். சர்வதேச வர்த்தகம், திட்டங்கள் குறித்து அவரிடம் பேசினோம். கடந்த 7 ஆண்டுகளாக மலேசியாவில் இருந்து வந்து, யாரும் இந்தியப் பிரதமரை சந்தித்ததில்லை. தற்போதைய மலேசியப் பிரதமர் மூலமாகவே அது சாத்தியமானது.
பொருளாதார ரீதியாக வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இந்தியாவும், மலேசியாவும் நிறையதிட்டங்களை உருவாக்க உள்ளோம். இந்தியாவிலிருந்து மலேசியா வருவோருக்கு விசா இலவசம் என்ற நடைமுறையை இரு நாட்டுப் பிரதமர்களும் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் சுற்றுலா மேம்படும்.
இந்திய-மலேசிய உறவு 4 தலைமுறைகளாக நீடிக்கிறது. மலேசியாவுக்கான நல்ல திட்டங்களை இந்திய அரசு அறிவிக்கும் என்றநம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மலேசிய அரசாங்கம், தமிழர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.
மலேசியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து திறன் வாய்ந்த தொழிலாளர்களை மலேசிய அரசு வேலைக்கு அழைக்கிறது. குறிப்பாக, ஜவுளித் துறையில் திறமைவாய்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களை மலேசியா அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.