கும்மிடிப்பூண்டிக்கு சென்னையிலிருந்து நேற்று காலை 7.10 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இந்த ரயில் எண்ணூர் – அத்திப்பட்டு இடையே சென்று கொண்டிருந்தபோது, உயர் அழுத்த மின்பாதையில் இருந்து மின்சாரத்தை பெறும் மடக்கு சாதனம் பழுதடைந்தது.
இதனால் ரயில் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அதையடுத்து அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து, பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், பின்னால் வந்த மின்சார ரயில்கள் அடுத்த தண்டவாளத்தில் மாற்றி இயக்கப்பட்டன. காலை 8.15 மணிக்கு பிறகு, மடக்கு சாதனத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. வழக்கமான பாதையில் மின்சார ரயில்கள் தொடர்ந்து இயங்கத் தொடங்கின. இச்சம்பவத்தால் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.



