தேர்தல் வருதுல்ல… திட்டக்குடி பெண்களுக்கு அமைச்சரின் தீபாவளி கிஃப்ட்!

0
20

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.

கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன், ஒரு கையில் பெண்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டு மறுகையில் அவர்களுக்கு புடவையை எடுத்து தீபாவளி கிஃப்ட்டாக தந்து வருகிறார்.

சிரித்த முகத்துடன் புடவையை வாங்கிச் செல்லும் பெண்கள், “ஏய் உன்னோட புடவையைக் காட்டு… என்ன டிசைன்னு பார்க்கலாம்” என்று விசாரணைகளைப் போட, அமைச்சரைப் பின்தொடரும் ஆண்களோ, ‘நமக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா?’க்கும் என்பது போல் ஏக்கப் பார்வை பார்க்கிறார்கள்.

திட்டக்குடியில் இருக்கும் ஜவுளிக்கடை முதலாளிகளோ, “ஏதோ, தீபாவளிக்குத்தான் கூடுதலா நாலு துணி மணி விற்கும் அதுக்கும் வேட்டு வைக்கிறாங்களா..?” என்று ஆதங்க அவலை மெல்கிறார்கள்.

இதனிடையே, அமைச்சரின் புடவை கிஃப்ட் டெக்னிக் பெண்கள் மத்தியில் பேசப்படுவதைப் பார்த்துவிட்டு பக்கத்து தொகுதியான ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ.வானவசந்தம் கார்த்திகேயனும் புடவைப் பார்சலை தூக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் அமைச்சரை விட ஒருபடி மேலே போய், கோரிக்கை மனுக்களை வாங்க வருவதாக முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு வீடு வீடாகச் சென்று புடவை கிஃப்ட்களை வழங்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here