இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவு

0
223

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டிச.24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு புகழேந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த டிச.4-ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “சூர்யமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான புகழேந்தியின் பல மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளன. டெல்லி உயர்நீதிமன்றமும் புகழேந்தியின் மனுக்களை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தியை, டிச.24-ம் தேதி காலை 11 மணிக்கு நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here