‘உதயநிதியை முதல்வராக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவுபகல் கனவாகவே இருக்கும்’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பேசி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களுக்காக வாழ்கிறோம் என்று சொல்லி, தன்னுடைய மக்களுக்காக திமுக வாழ்கிறது. 4 ஆண்டு முடிந்தும் மோசமான ஆட்சியாக உள்ளது. கோவையில் 3 பேர் இளம்பெண்ணை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போதைப் பொருள் அதிக நடமாட்டம் காரணமாக இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் ஆட்சி நடைபெறுவதற்கு கோவை சம்பவமே சாட்சி. வரும் தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்திக்கும். 2026-ம் ஆண்டு உதயநிதியை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் ஆசை. அது பகல் கனவு மட்டுமே.
2026-ம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, அனைத்து ரயில்களிலும் தென்னை விவசாயிகளுக்காக நீரா பானம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசு எதுவும் தரவில்லை என திமுக சொல்கிறது. கரூர் சம்பவத்துக்கும், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கும் திமுக தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் துக்கு நேற்று வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: விஜய் அறிவிப்பால் பாதிப்பில்லை தேர்தல் நிலைப்பாடு குறித்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பால் எங்கள் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. சொத்து வரி, குடிநீர் வரி, மின்கட்டணம் என அனைத்தையும் பல மடங்கு உயர்த்திய திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக-வை தோற்கடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.














