வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை ஓரிரு நாளில் இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசகள் சார்பில் தீவிர எடுக்கப்பட்டு வருகின்றன.
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று முன்தினம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 10 தமிழர்கள், 3 ஆந்திர மாநிலத்தவர், 2 மலையாளிகள் என மொத்தம் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தவர்களை மீட்கவும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் முதல்வர் விஜய் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அயலக தமிழர் நலத்துறைக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமானி ஐபிஎஸ் உடனடியாக வியட்நாமின் ஹோ சி மின் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் நேற்று வியட்நாம் சென்றடைந்து, பணிகளை தொடர்ந்து வருகிறார்.
இந்திய வெளியுறவு அமைச்சகம், வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்த பணிகளை தமிழக அரசு அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து, ஒருங்கிணைத்து வருகின்றனர். ஓரிரு நாட்களுக்குள் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மீட்கப்பட்ட மற்ற பயணிகள் இந்தியா திரும்பவும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
