“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்” என்று மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று (ஜூன் 4) திறக்கப்பட்டன. தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தப்பட்டது.
இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கத்தைவிட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச் 2 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரையும், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16-ம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நாட்களில் தமிழக அரசு சார்பில் மாணவர்கள் நலன் சார்ந்த சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதனையொட்டி மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!” என்று பதிவிட்டுள்ளார்.
