தீபாவளி பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவதில் பட்டாசு தவிர்த்து மற்றோரு முக்கியமான விஷயம் தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள். சாதாரண நாட்களில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை விட தீபாவளியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஆடியன்ஸ் மத்தியில் மவுசு அதிகம். காரணம் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துவிட்டு குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று புதிய படம் பார்த்தால்தான் சிலருக்கு தீபாவளியே நிறைவடையும். அதிலும் பெரிய ஸ்டார்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த படம் நன்றாக இருந்துவிட்டால் டபுள் சந்தோஷமும் கூட.
அந்த வரிசையில் இந்த ஆண்டு தீபாவளி ரேஸ்லில் மூன்று முக்கிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இந்த முறை தீபாவளி திங்கள்கிழமை வருவதால் இந்த மூன்று படங்களுமே அக்.17 (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆகின்றன. அவை பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’.
டியூட்: இயக்குநராக ‘கோமாளி’ படம் மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் அதன்பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் மூலம் இளசுகளின் ஆதர்ச நடிகர்களில் ஒருவராகி விட்டார். முந்தைய இரண்டு படங்களும் பெற்ற பிளாக்பஸ்டர் வெற்றியின் காரணமாக ‘டியூட்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு ஏற்றவாறு பக்காவாக திட்டமிட்டு ரிலீஸுக்கு ஒருமாதம் முன்பே ப்ரொமோஷனையும் தொடங்கியது படக்குழு.
குறிப்பாக பிரதீப்பின் முந்தைய இரண்டு படங்களும் தெலுங்கில் பெற்ற வரவேற்பு காரணமாக இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் நல்ல ஓபனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படங்களைப் போலவே சரவெடி போன்ற திரைக்கதை மட்டும் இருந்துவிட்டால் இந்தப் படம் பிரதீப்புக்கு ஹாட்ரிக் வெற்றியாகிவிடும்.
பைசன்: யார் ஹீரோவாக நடித்தாலும் மாரி செல்வராஜ் படங்களுக்கு என்று எப்போதும் தனி எதிர்பார்ப்பு உண்டு. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை தன் கதைகளின் வழியே தொடர்ந்து சொல்லி வரும் அவரது படைப்புகள் இதுவரை ஏமாற்றியதில்லை. அந்த வகையில் துருவ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.
எனினும் மாரி செல்வராஜின் முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இந்தப் படத்தின் ப்ரொமோஷன் பணிகள் சற்றே மந்தநிலையில்தான் உள்ளன. சமூக வலைதளங்களிலும் கூட பெரிதாக விளம்பரங்கள் இல்லை. குறிப்பாக, மாரி செல்வராஜின் முந்தைய படமான ‘வாழை’யில் கலையரசனைத் தவிர தெரிந்த முகங்கள் யாரும் இல்லை என்றாலும், அந்த படத்துக்கு நல்ல விளம்பரம் செய்யப்பட்டது. பாடல்களும் ரிலீஸுக்கு முன்பே ஹிட் ஆகின.
எனினும், இந்தப் படத்துக்கு அப்படி எதுவும் நிகழவில்லை. இருப்பினும் எவ்வளவு விளம்பரம் செய்தாலும் படத்தின் கன்டென்ட் தரமாக அமைந்து விட்டால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
டீசல்: ‘லப்பர் பந்து’ படத்தின் மெகா ஹிட்டுக்குப் பிறகு அந்த வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் ஹரிஷ் கல்யாண் களமிறங்கியுள்ள படம் இது. இந்தப் படத்துக்கும் பெரியளவில் விளம்பரங்கள் இல்லையென்றாலும் இதன் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் அமைந்திருந்தது இப்படத்துக்கு ஒரு ப்ளஸ் பாயின்ட் என்று சொல்லலாம்.
‘லப்பர் பந்து’ போல மவுத் டாக்கில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவினால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு படங்களை தாண்டி வசூலிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த மூன்று படங்களையும் தவிர நட்டி நடித்துள்ள ‘கம்பி கட்ற கதை’, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகின்றன. ஆனால், சமூக வலைதள ஹைப், முந்தைய படங்களில் வெற்றி என்ற அளவில் மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் மூன்று படங்களே அதிக எதிர்பார்க்கப்படும் படங்களாக தீபாவளி பந்தயத்தில் உள்ளன.
ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையின் போது மலையாளத்தில் மோகன்லாலின் ‘ஹிருதயபூர்வம்’, ஃபகத் ஃபாசிலின் ‘ஓடும் குதிர சாடும் குதிர’ போன்ற பெரிய படங்களை பின்னுக்குத் தள்ளி எந்தவித ‘ஹைப்’பும் இன்றி வெளியான கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ இந்திய அளவில் பெரும் வெற்றிபெற்ற சம்பவமும் நடந்தது.
யாருக்கு தெரியும்? ரசிகர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்பான திரைக்கதையும், சுவாரஸ்யமான மேக்கிங்கும் அமைந்துவிட்டால் திரையில் எந்தவிதமான மேஜிக்கும் நடக்கக் கூடும்.