Home மாநில செய்திகள் பேருந்தை நிறுத்தி மதுபானம் வாங்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: நடத்துநர் பணிநீக்கம்

பேருந்தை நிறுத்தி மதுபானம் வாங்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: நடத்துநர் பணிநீக்கம்

0

டாஸ்மாக் கடையில் அரசுப் பேருந்தை நிறுத்தி மதுபானம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, அந்த பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுநர் பணியிடை நீக்கமும், நடத்துநர் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அருகே உள்ள ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவர், அரசு போக்குவரத்துக்கழக கோவில்பட்டி பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.

கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தைச் சேர்ந்த முத்தையா என்பவர் கோவில்பட்டி பணிமனையில் தற்காலிக நடத்துநராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் கோவில்பட்டியில் இருந்து செங்கோட்டை செல்லும் பேருந்தில் பணியில் இருந்தனர்.

இந்தப் பேருந்து நேற்று முன்தினம் இரவு சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே நிற்பது, சாலையில் நின்றபடி ஒருவர், பேருந்தில் நடத்துநர் அமரும் இருக்கையில் இருப்பவரிடம் மதுபான பாட்டில்களைக் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இதுதொடர்பாக ஓட்டுநர் கணேசமூர்த்தி, நடத்துநர் முத்தையா ஆகியோரிடம் கோவில்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் (பொறுப்பு) சங்கர் விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து கணேசமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிக நடத்துநர் முத்தையா நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தூத்துக்குடி மண்டல பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் பிறப்பித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version