பெட்ரோல், டீசல் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று 132-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மிக நீண்ட காலம் நீடித்தன. கரோனா காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகமும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களால் பிரச்சினைகள் தொடர்கின்றன.
தற்போது சுமார் ஒரு மாதமாக மேற்காசிய போர் தீவிரமடைந்து வருகிறது. அந்த பிராந்தியத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் போரால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். வளைகுடா மக்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. போர் சூழலில் இந்தியர்களை பாதுகாத்து அரவணைத்துச் செல்லும் வளைகுடா நாடுகளின் அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்காசிய போரால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த சவாலை நாம் திறம்பட எதிர்கொண்டு வருகிறோம். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிடம் இந்தியாவுக்கு நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இதன் மூலம் எரிபொருள் பிரச்சினையை சமாளித்து வருகிறோம். ஒட்டுமொத்த இந்தியர்களும் ஒன்றிணைந்து புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டும்.
போர் விவகாரத்தில் முற்றிலுமாக அரசியலை தவிர்க்க வேண்டும். இது 140 கோடி மக்களின் நலன் சார்ந்தது. இதில் சுயநல அரசியலுக்கு ஒருபோதும் இடம் அளிக்கக்கூடாது. தற்போதைய சூழலில் வதந்திகளை பரப்புவோர் சொந்த நாட்டுக்கே துரோகம் இழைக்கின்றனர்.
இந்திய மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். எரிபொருள் தொடர்பான (பெட்ரோல், டீசல்) வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு நிர்வாகம் அளிக்கும் தகவல்களை மட்டுமே நம்புங்கள், அதற்கேற்ப செயல்படுங்கள். கடந்த காலங்களில் நாம் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு உள்ளோம். 140 கோடி இந்தியர்களின் பலத்தால் இந்த சவாலிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
இந்திய மக்கள் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுகிறேன். மனம், உடல் நலனை மேம்படுத்த நாள்தோறும் யோகா செய்ய வேண்டும். பானங்கள் மற்றும் உணவு வகைகளில் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். சமையல் எண்ணெய் அளவை 10 சதவீதம் அளவுக்கு குறைத்து கொள்ள வேண்டும். இந்திய மீனவர்கள் கடலில் பணியாற்றும் மாபெரும் வீரர்கள் ஆவர்.
அவர்கள் சுயசார்பு இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறோம். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பையை வென்று புதிய சாதனைபடைத்திருக்கிறது. இது அந்த பகுதி இளம் தலைமுறையினருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை காலம் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
உத்தர பிரதேசம் வாராணசியில் அண்மையில் ஒரு மணி நேரத்தில் 2.51 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் மூலம் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. பிஎம் சூர்ய கர் முப்ட் முஜிலி யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சூரிய மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மரக்கன்று நடுதல், சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களால் பருவநிலை மாறுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.














