அரசின் நல திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்தும் இமாச்சல காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இமாச்சல மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பேரழிவுகரமான நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தால் அம்மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதையடுத்து, அரசு நில திட்டங்களுக்கான நிதியை திரட்ட அரசின் கவனம் கோயில்களை நோக்கி திரும்பியுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த ஜனவரி 29-ம் தேதி இமாச்சலின்் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அரசு நடத்தும் நல திட்டங்கள் மற்றும் தொண்டு செயல்பாடுகளுக்கு கோயில்களிடம் இருந்து நிதி பங்களிப்பை கோரியது.
குறிப்பாக, முதல்வரின் சுக் ஆஷ்ரே மற்றும் சுக் சிக்சா யோஜனா திட்டங்களுக்கு நிதியுதவி கோரி பிப்ரவரி 2023 மற்றும் செப்டம்பர் 2024-ல் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
இந்து மத நிறுவன அறக்கட்டளை சட்டத்தின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில் அறக்கட்டளைகள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றன. இந்த நிலையில், மேற்கூறிய முதல்வரின் திட்டங்களுக்கும் நிதி பங்களிப்பு செய்யலாம் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாஜக கடும் எதிர்ப்பு: இதுகுறித்து முன்னாள் முதல்வரும் , பாஜக தலைவருமான ஜெய்ராம் தாக்குர் கூறியதாவது: சனாதன தர்மம் குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்த காங்கிரஸ் கட்சி தற்போது கோயில்களின் அனைத்து நிதியையும் அரசு நல திட்டங்களுக்கு அனுப்ப கோருகிறது. இது, துரதிருஷ்டவசமானது.
ஒரு வேளை கோவிட் போன்ற இயற்கை பேரழிவு நெருக்கடிகளின்போது மனிதாபிமான உதவிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கோயில் பணம் அனுப்பபட்டிருந்தால் அதனை புரிந்து கொள்ளக்கூடியதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்திருக்கும்.
ஒரு புறம் காங்கிரஸ் தலைவர்கள் சனாதன தர்மம் மற்றும் அதை பின்பற்றுபவர்களை அவமதிக்கிறார்கள். மறுபுறும் தங்களது கொள்கை திட்டங்களை நிறைவேற்ற கோயில் நிதியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த முடிவு விநோதமானது. கோயில் கமிட்டிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் தாக்குர் தெரிவித்தார்.