கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளராக தற்போதைய எம்எல்ஏ-வான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், கும்மிடிப்பூண்டி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துரைத்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து, டி.ஜெ.கோவிந்தராஜன் கூறியதாவது: கும்மிடிப்பூண்டி தொகுதியில், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே காரணி, புதுப்பாளையம் ஆகிய கிராமங்களையும், அஞ்சாத்தம்மன் கோயில் பகுதியையும் இணைக்கும் வகையில் உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் 60 ஆண்டு காலமாக வைத்த கோரிக்கையை, ரூ.20 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைத்து நிறைவேற்றியுள்ளோம்.
ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, பாத்தபாளையம் ஊராட்சிப் பகுதிகளில் ரூ.21 கோடி மதிப்பில் 5 உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கவரைப்பேட்டை முதல் சத்தியவேடு வரை இருவழிப் பாதை ரூ.72 கோடி செலவில் நான்குவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
கே.எஸ்.ரோடு முதல் மாநெல்லூர் சிப்காட் வரை ரூ.55 கோடி செலவில் அணுகு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்பில் சாலையின் இருபுறமும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் ரூ.60 லட்சம் மதிப்பில் ரத்த சுத்திகரிப்பு நிலையம், ரூ.17.58 லட்சம் மதிப்பில் நவீன டிஜிட்டல், எக்ஸ்ரே இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளன; ஈகுவார்பாளையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
சிறுபுழல் பேட்டை குருவாட்டுச்சேரி, ஓபசமுத்திரம், சித்தராஜ கண்டிகை பகுதிகளில் ரூ.61 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், என் சொந்த பணத்தில் தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறேன்.
குறிப்பாக, 2021 ஜூன் முதல் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை மற்றும் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் 12 பேருக்கு மாதம் ரூ.1.07 லட்சம் ஊதியம் வழங்கி வருகிறேன்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிக்கும் 6 மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் நிதி உதவியளித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களின் கோரிக்கைகள்
கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று, நிலத்தடி நீரில் அதிக மாசு ஏற்பட்டு வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
கும்மிடிப்பூண்டி பகுதியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம், படுக்கை வசதியுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு கலைக்கல்லூரி, மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை ஆகியவை அமைக்கவேண்டும்.
கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம் பேருந்து நிலையங்களை மேம்படுத்த வேண்டும். நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும், நீர் நிலைகளை முறையாக தூர்வாரி பாதுகாக்கவேண்டும், பெரிய அளவிலான மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்














