தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன.
இந்த தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளுக்காக நிர்வாகத்தோடு பேசுவதற்கு அங்கீகாரம் பெறவேண்டும் என்பதால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 2009-ம் ஆண்டு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு, தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மீண்டும் தேர்தல் நடத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தில் 51 வாக்குச்சாவடிகளில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இத்தேர்தலில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பாரதீய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் (தொமுச), தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கம் உட்பட 8 சங்கங்கள் போட்டியிட்டன.
இத்தேர்தலில் 13,018 வாக்குகள் பதிவாகி இருந்தன. இவற்றில் செல்லாத 109 வாக்குகளை தவிர்த்து, 12,909 வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் (தொமுச) 6,699 வாக்குகள் (51.5 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றது. இதன்மூலம் இச்சங்கம் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தேர்வாகி உள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அண்ணா தொழிற்சங்கம் 2,041 வாக்குகள் (15.7 சதவீதம்) பெற்று 2-வது இடமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற கழகம் 1,627 வாக்குகள் (12.5 சதவீதம்) பெற்று 3-வது இடமும் பெற்றன.







