நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் நேற்று கேரள அதிகாரிகளால் அகற்றப்பட்டு, 16 லாரிகளில் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்பட்டது.
நெல்லை நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனையின் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர், பேட்டையைச் சேர்ந்த மாயாண்டி, சேலம் ஓமலூரைச் சேர்ந்த சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்லதுரை, கேரள கழிவு மேலாண்மை அலுவலர் நிதிஷ் ஜார்ஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இதற்கிடையே, மருத்துவ கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, நெல்லையில் 6 இடங்களில் கொட்டப்பட்ட கேரளக் கழிவுகளை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. திருவனந்தபுரம் சார் ஆட்சியர் சாச்சி, கேரள சுகாதாரத் துறை அலுவலர் கோபகுமார் உள்ளிட்டோர் தலைமையிலான அதிகாரிகள் நெல்லை வந்திருந்தனர்.
சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், பயிற்சி ஆட்சியர் அம்பிகா ஜெயின் ஆகியோர் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கழிவு அகற்றும் பணியை ஆய்வு செய்தனர். இலந்தைகுளம், பழவூர், பாரதி நகர், கொண்டாநகரம், நடுக்கல்லூர், கோடகநல்லூர் ஆகிய 6 இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றி, 16 லாரிகளில் ஏற்றி, கேரளாவுக்கு கொண்டுசெல்லும் பணி தொடங்கியது.
கேரள அரசு நோட்டீஸ்: இதுகுறித்து கேரள சுகாதார அலுவலர் கோபகுமார் கூறும்போது, “மருத்துவக் கழிவுகளை 16 லாரிகளில் ஏற்றி, அப்புறப்படுத்தி வருகிறோம். கேரளாவில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவை அகற்றுவதற்கு தமிழக போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால் மாலைக்குள் முழுவதுமாக கழிவு அகற்றும் பணி நிறைவடையும். கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவை அகற்றும் 3 நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து விளக்கம் கிடைக்கப்பெற்ற பின்னர், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.














