மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன கொள்கை கைவிடப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

0
135

மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு இல்லாமல் நேரடியாக நியமனம் செய்வதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி இதுகுறித்து கூறும்ம்போது,, “இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதலாகும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, இடபிள்யூஎஸ் பணியிடங்கள் இப்போது ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். மேலும், இட ஒதுக்கீட்டைப் பறித்து அரசியலமைப்பை மாற்றுவதற்கான பாஜகவின் ‘சக்கரவியூகம்’ இது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த முடிவை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய பங்கு வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வானும் எதிர்த்துள்ளார்.

அவர் கூறும்போது, “இதுபோன்ற நியமனங்களில் எனது கட்சியின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. எந்தவொரு அரசுப் பணி நியமனமாக இருந்தாலும் அதில் இட ஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” என்றார்.

இந்நிலையில், மத்திய அரசு பணியிடங்களில் நேரடி நியமனங்களை மத்திய அரசு கைவிடவில்லை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “மத்திய அரசின் பல்வேறு பணியிடங்களில் நேரடி நியமனக் கொள்கையை இன்னும் நாங்கள் கைவிடவில்லை. அந்த கொள்கை தொடரும். மேலும் அந்தக் கொள்கையில் இடஒதுக்கீட்டை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்வோம்.

அந்த கொள்கையை நாங்கள் இதுவரை ரத்து செய்யவில்லை. சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணையை நிலைநிறுத்துவது முக்கியம் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இதன்மூலம் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த தகுதியான நபர்கள் மத்திய அரசுப் பணிகளில் தங்கள் சரியான பிரதிநிதித்துவத்தைப் பெறுவார்கள்.

நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள சமத்துவம் மற்றும் சமூக நீதியின் கொள்கைகளுடன், இடஒதுக்கீடு கொள்கையும் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார். இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here