இலங்கை – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை (6-ம் தேதி) காலே நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திமுத் கருணரத்னே தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டம் அவருக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். 36 வயதான கருணரத்னே 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்கள், 34 அரை சதங்களுடன் 7,172 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 ஆட்டங்களில் பங்கேற்று ஒரு சதம், 11 அரை சதங்களுடன் 1,316 ரன்கள் சேர்த்துள்ளார்.
கருணரத்னே கூறும்போது, “ஒரு டெஸ்ட் வீரர் வருடத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி ஃபார்மை தக்க வைத்துக் கொள்வது கடினம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில், நாங்கள் மிகக் குறைவான இருதரப்பு தொடர்களிலேயே விளையாடினோம். எனது தற்போதைய பார்மும் ஓய்வு பெற மற்றொரு காரணம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முடிவில் எனது 100 டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவது சரியான நேரம் என்று நினைத்தேன்.
100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,000 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது எல்லா வீரருக்கும் உள்ள கனவு. இது ஒரு பெரிய சாதனை. கிரிக்கெட் விளையாடத் தொடங்கும்போது, அந்த இலக்குகளைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் தொடர்ந்து விளையாடும்போது, வெவ்வேறு இலக்குகளைக் காண்போம். ஆனால் இலங்கை அணி ஒரு வருடத்தில் குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடுகிறது. இதனால் 10,000 ரன்களை எட்டுவது வெகு தொலைவில் உள்ளதாகவே கருதுகிறேன். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதை ஒரு சாதனையாக கருதுகிறேன்” என்றார்.














