சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு பாதுகாப்புக்காக போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணியில் இருந்த போலீசார் அருவி மற்றும் கோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால் குற்றச் செயல்கள் குறைந்தன. இந்த நிலையில் திடீரென புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டது.
இதனால் குற்றச் செயல்கள் மீண்டும் அந்தப் பகுதியில் அதிகரித்தது. பயணிகளின் வாகனங்களில் இருந்து நகை, பணம், செல்போன் திருட்டு போவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நேரடியாக விசாரித்து புறக்காவல் நிலையத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குலசேகரம் போலீஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 7:00 மணி முதல் போலீசார் புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.














