முதல்வர் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா? – உறுதியாக தெரிவிக்க தமிழிசை கோரிக்கை

0
163

முதல்வரின் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா என்பதை உறுதியாக சொல்ல வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் குற்றவாளிகளை சரியாக கண்டுபிடிக்காத சூழ்நிலை நிலவுகிறது. பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பெண்களுக்கான பகிர்வின் பிரிவு ஒன்று இருக்க வேண்டும்.

இது, தமிழகத்தில் பல துறைகளில் ஏற்படுத்தப்படவில்லை என மத்திய தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. அதற்கான பிரிவே ஏற்படுத்தவில்லை. கரோனாவுக்காக, ஒதுக்கப்பட்ட ரூ.256 கோடி செலவிடபடவில்லை. 3,575 ஆக்ஸிஜன் செரிவூட்டிகளில் சுமார் 167 ஆக்ஸிஜன் செரிவூட்டில்கள் பயன்படுத்தப்படவில்லை. இதை அரசு சரிசெய்ய வேண்டும்.

பாஜகவில் நிர்வாகத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு இருக்கிறது. இதேபோல் அனைத்து கட்சிகளிலும் நாடாளுமன்றத்திலும் வர வேண்டும் என்பது எல்லோரின் கருத்து. மத்திய அரசு எது கொண்டு வந்தாலும் ஏற்றக்கொள்ளமாட்டோம் என்று கூறும் தமிழக அரசு, மத்திய அரசு கொடுக்கும் நிதியை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது என்பது வேதனை.

அதானியை சந்திக்கவில்லை என்று முதல்வர் தெரிவிக்கிறார். அதானிக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று துணை முதல்வர் உதயநிதி சொல்கிறார். அப்படியானால் முதல்வரின் குடும்பத்தினர் அதானியை சந்தித்தனரா, அதானிக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here