தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 25-ம் தேதி நடத்தியது தமிழக அரசு. அதற்கு ஒரு மாதம் முன்னதாகத்தான் (ஆகஸ்ட் 21) மதுரையில் தனது கட்சியின் 2-வது மாநில மாநாட்டை நடத்தினார் நடிகர் விஜய். இப்போது இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து ஒரு அரசியல் சர்ச்சை வெடித்திருக்கிறது.
மதுரையில் விஜய் மாநாடு கூட்டிய அதே நாளில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களில் 20 சதவீதம் பேர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள் (வழக்கமாக இது 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்குமாம்). “இவர்கள் தங்களது விடுப்புக்கான காரணங்களை வேறாகச் சொல்லி இருந்தாலும் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு செல்வதற்காகவே இவர்களில் பெரும்பகுதியினர் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்” என்று அடித்துச் சொல்கிறார்கள் தென் மாவட்ட அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சிலர்.
மேலும் அவர்கள், “அரசுக்கும் இது அதிர்ச்சியளிக்கும் செய்திதான். இளம் தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் விஜய் பக்கம் சாயலாம் என்று ஒரு கணிப்பு இருக்கும் நிலையில், விஜய் மாநாட்டுக்காக கல்லூரி மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றிருப்பதை சீரியஸாக எடுத்துக் கொண்டதால் தான் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுக் கல்லூரி மாணவர்களையும் பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்து இரவு 8 மணி வரை நேரலையும் செய்யப்பட்டது.
இந்த நேரலையை அரசுக் கல்லூரி மாணவர்களை பார்க்க வைப்பதற்காக மாவட்ட நிர்வாகங்கள் பெரிய அளவில் மெனக்கிட்டன. இதன் தொடர்ச்சியாக, கல்லூரி மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை அவர்கள் மனதில் பதியவைப்பதற்காக தமிழகம் முழுவதுமே தொடர் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது அரசு. இந்த நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்துவர வேண்டும், அவர்களுக்கான போக்குவரத்து, உணவு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றெல்லாம் கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்படுகிறது.” என்று சொன்னார்கள். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் இன்னும் யார் யாருக்கு எல்லாம் எனிமா கொடுக்கப் போகிறதோ!