2026 தேர்தலில் திமுக-வுக்கும் தங்களுக்கும் தான் போட்டி என்கிறார் தவெக தலைவர் விஜய். ஆனால் தென்காசி மாவட்டத்தில், ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் காங்கிரஸும் மதிமுக-வும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளராக இருப்பவர் ராம.உதயசூரியன். அண்மையில் இவர் தனது முகநூலில் பதிவிட்ட பதிவு ஒன்று, ஆளும் கூட்டணிக்குள் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. ‘ராமநதி – ஜம்புநதி கால்வாய் திட்டத்துக்கு திமுக அரசு ஒதுக்கிய ரூ.21 கோடியில் கமிஷன் கிடைக்காத விரக்தியில் சட்டமன்ற உறுப்பினர்’ என்பதுதான் உதயசூரியன் போட்ட அந்த முகநூல் பதிவு.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரான எஸ்.பழனி நாடார் தான் இப்போது தென்காசி எம்எல்ஏ-வாக இருக்கிறார். பெயர் குறிப்பிடாவிட்டாலும் பழனி நாடாரைத்தான் உதயசூரியன் முகநூலில் உரசி இருக்கிறார் என்று கோபப்படும் மாவட்ட காங்கிரஸ் பிரமுகர்கள், உதயசூரியனுக்கு பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.
திருச்சி மதிமுக மாநாட்டுக்காக பழனி நாடாரிடம் உதயசூரியன் ரூ.1 லட்சம் நன்கொடை கேட்டதாகவும், அவர் தரமறுத்ததால் இப்படி அவதூறு பரப்புவதாகவும் கொந்தளிக்கிறார்கள் கதர் பார்ட்டிகள். அதேபோல், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளை பழனி நாடார் அவமதித்துவிட்டதாகச் சொல்லி மதிமுக-வினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்கள்.
அண்மையில் சுரண்டை நகரில் பழனி நாடார் ஏற்பாடு செய்த காங்கிரஸ் கூட்டத்தில் திருச்சி வேலுச்சாமி திமுக-வை விமர்சித்துப் பேசினார். இது திமுக-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இப்போது மதிமுக – காங்கிரஸ் சொற்போரும் ஆளும் கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.
இது தொடர்பாக நாம் ராம.உதயசூரியனிடம் பேசியபோது, “ஆவுடையானூர்- பாவூர்சத்திரம் சந்தை சாலை அமைக்கும் பணிக்கு அண்மையில் பூமி பூஜை நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த எம்எல்ஏ-வான பழனி நாடாரிடம் எங்கள் பகுதி இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை நான் கண்டித்தேன். அதனால் அந்த நபர் என் மீது இப்போது வரைக்கும் அவதூறு பரப்பி வருகிறார். முன்பு ஏதோ ஒரு உதவி கேட்டுப் போன அந்த இளைஞரை எம்எல்ஏ தரப்பில் உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள். அந்த ஆத்திரத்தில் தான் அன்றைக்கு அவர் எம்எல்ஏ-விடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்நிலையில், திருச்சி மாநாட்டுக்காக கூட்டணி கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பழனி நாடாரைச் சந்தித்து நன்கொடை கேட்டோம். அப்போது, ஆவுடையானூர் சம்பவத்தில் இளைஞரை தூண்டிவிட்டு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி என்னிடம் ஒருமையில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எம்எல்ஏ. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் சமாதானமாகவில்லை.
நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த ராமநதி – ஜம்புநதி கால்வாய் திட்டம் மீண்டும் உயிர்பெற்று பணிகள் தொடங்கப் போவதைக் கேள்விப்பட்டு நானே தான் அன்றைய பூமிபூஜையில் கலந்து கொண்டேன். ஆனால், எம்எல்ஏ-வாக இருக்கும் தன்னை பூமி பூஜைக்கு அழைக்காதது ஏன் என அதிகாரிகளை தவறாகப் பேசி இருக்கிறார் எம்எல்ஏ. திட்டப் பணிகள் சரியாக நடக்கவில்லை என புகார்களையும் அனுப்பி இருக்கிறார்.
இந்தத் திட்டத்துக்கு அரசு கூடுதலாக ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், எம்எல்ஏ-வின் எதிர்பார்ப்பு ஏதோ நிறைவேறவில்லை போலிருக்கிறது. அந்த விரக்தியில் தான் என்னிடமும் திட்ட அதிகாரிகளிடமும் அவர் அப்படிப் பேசி இருக்கிறார். அதனால் தான் முகநூலில் எனது கருத்தை பதிவிட்டேன். ஆனால், ரூ.1 லட்சம் நன்கொடை தராத ஆத்திரத்தில் நான் விமர்சனம் செய்வதாக காங்கிரஸார் சிலர் பழி சுமத்துகின்றனர்.
உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை சிசி டிவி பதிவை வெளியிட்டு, என் மீது தவறு இருந்தால் தாராளமாக புகாரளிக்கலாம். தேர்தலில் பழனி நாடார் வெற்றிக்காக கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தீவிர பிரச்சாரம் செய்துள்ளேன். அதையெல்லாம் மறந்துவிட்டு சக நிர்வாகிகள் மத்தியில் என்னை ஒருமையில் பேசிய அவரது செயல் நாகரிகமற்றது” என்றார்.
இதுகுறித்து பழனி நாடாரிடம் கேட்டதற்கு, “திருச்சி மதிமுக மாநாட்டுக்கு நன்கொடை வாங்குவதற்காக உதயசூரியன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் என்னை வந்து சந்தித்தனர். ஆனால், நன்கொடை தரமுடியாது என்று நான் கூறிவிட்டேன்.
ஆவுடையானூரில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்படும் பேருந்து நிழற்குடை காண்ட்ராக்டிலும், பள்ளிக் கட்டிடம் கட்டும் காண்ட்ராக்டிலும் உதயசூரியன் கமிஷன் வாங்கியுள்ளார். கமிஷனும் வாங்கிவிட்டு நன்கொடையும் கேட்பது ஏன் என்று கேட்டுத்தான் நன்கொடை வழங்க மறுத்தேன். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் கேட்ட நன்கொடையைக் கொடுக்காததால் என்னைப் பற்றி தவறாக விமர்சனம் செய்கிறார்” என்றார்.
ஆக மொத்தத்துல, எல்லாமே ‘கமிஷன்’ படுத்தும் பாடு தானா அய்யாமாரே..?