நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ படத்தை முடித்துவிட்டார். இதில் மம்மூட்டி, நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் அக். 16 -ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்.15-ல் வெளியாவதால், இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். மதுரை பின்னணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு சிவகங்கை அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் நேற்று தொடங்கியது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, உறியடி விஜயகுமார், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் மற்றும் பிரிமார்க் புரொடக் ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. படத்தை அடுத்து ஆண்டு கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, இப்படத்தின் பூஜையை முன்னிட்டு மாரநாடு கருப்பணசாமி கோயிலுக்கு 18 அடி உயர அரிவாளைக் காணிக்கையாக வழங்கியுள்ளார் தனுஷ். அவர் வருவதை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவர்களுக்கு 20 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கப்பட்டது.
