டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்: திரை விமர்சனம்

0
177

கிஷ்சா 47 (சந்தானம்) என்ற பிரபலமான யூடியூப் சினிமா விமர்சகர், ‘ஹிட்ச்ஹாக் இருதயராஜ்’ என்ற ஹாரர் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க அழைக்கப்படுகிறார். இதற்காக, கிஷ்சா, அவரது காதலி ஹர்சினி, அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் திரையரங்குக்கு குடும்பமாகச் செல்கின்றனர்.

படம் பார்க்கத் தொடங்கிய பின்னர்தான், அந்த திரையரங்கமும் அதில் ஓடும் திரைப்படமும் தங்களைப் போன்றவர்களுக்காக வைக்கப்பட்ட கொலைகார ‘டிராப்’ என்பதை உணர்கிறார்கள். விமர்சனம் என்ற பெயரில், திரைப்படங்களைத் தாறுமாறாகக் கிழித்துத் தொங்கவிட்டு, அவை தோல்வியடையக் காரணமாக இருக்கும் கிஷ்சாவையும் அவன் குடும்பத்தையும் சைக்கோ கொலைகாரர்கள் துரத்த, அவர்களிடமிருந்து காதலி மற்றும் குடும்பத்தினரை கிஷ்சா காப்பாற்றினாரா, இல்லையா என்பது கதை.

‘திரைப்படத்துக்குள் ஒரு திரைப்படம்’, அந்தத் திரைப்படத்துக்குள் பிரவேசிப்பது, அதில் உலவும் கொலைகாரக் கதாபாத்திரங்களிடம் சிக்குவது என்கிற கான்செப்டை வைத்து, இயக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த். அதே நேரம், சில ஹாலிவுட் ஹாரர் கிளாசிக் படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் கதைக்களத்தை, ஏ.ஆர்.மோகனின் பிரம்மாண்டக்கலை இயக்கம், ராஜா கிருஷ்ணனின் அட்டகாசமான ஒலிக் கலவை, தீபக் குமார் பாண்டேவின் ரணகளமான ஒளிப்பதிவின் வழியாகக் காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லலாம்.

கதையை ஒதுக்குப்புறமான திரையரங்கிலிருந்து வெளியேற்றி, ‘குரூஸ்’ சொகுசுக் கப்பல், அங்கிருந்து தீவு பங்களா எனக் களத்தை அடுத்தடுத்து மாற்றிச் சென்றது, பார்த்துப் பழகிய ஹாரர் கதாபாத்திரங்களில் இருந்து காப்பாற்றுகிறது.

சந்தானம் – மொட்டை ராஜேந்திரன் கூட்டணியின் ஒன்லைனர்களுக்கு சில இடங்களில் மக்கள் சிரிக்கின்றனர். ராகவனாக வரும் கவுதம் வாசுதேவ் மேனன் கிளைமாக்ஸுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கும் நிலையில், ‘ஸ்பூப்’ என்ற பெயரில் அவரை சந்தானம் பங்கம் பண்ணியிருக்கும் காட்சிகளுக்குத் திரையில் தொடர் கரவொலி.

சந்தானத்தின் பெற்றோர், தங்கை, காதலி ஆகியோர், திரையில் விரியும் உலகில் அடையும் கதாபாத்திர உருமாற்றங்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. குறிப்பாக ஹர்சினியாக வரும் கீதிகாவுக்கு பேய் தோற்றம் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது.

சந்தானம் தொடங்கி துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்கள் வரை அனைவரும் நடிப்பில் நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, ஹிட்ச்ஹாக் இருதயராஜாவாக வரும் செல்வராகவன், யூடியூப் விமர்சகர்களைப் புரட்டியெடுத்திருப்பது, படைப்பாளிகளின் வலியைச் சொல்லும் பக்கா ட்ரீட்மென்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here