முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அதே வீட்டு பணிப் பெண், பிரஜ்வலின் தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா கடந்த 2020-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடந்தார்.
இந்த வழக்கு மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் கடந்த ஆண்டு ஜாமீன் பெற்ற ரேவண்ணா, நீதிமன்ற கண்காணிப்பில் இருந்தார். இவ்வழக்கின் விசாரணை முழுவதும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி கே.என்.சிவகுமார் நேற்று தீர்ப்பை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
ரேவண்ணா தன்னை 2020-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மனுதாரர் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் 4 ஆண்டுகள் கழித்து மிகவும் தாமதமாக புகார் அளித்தது ஏன்? அவரது தாமதத்திற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்களை அளித்த மனுதாரர், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை அளிக்கவில்லை. எனவே ரேவண்ணாவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்க முடியாது. அவரை விடுதலை செய்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.







