டெல்லி சட்டப்பேரவை வளாகத்துக்குள் நேற்று நுழைந்த ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை கடந்த செவ்வாய் கிழமை அன்று தொடங்கியது. அப்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படம் அகற்றப்பட்டதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் உரையின் போது ஜெய் பிம் என கோஷம் எழுப்பினர். இதனால் ஆம் ஆத்மி எம்எல்ஏ,.க்கள் 21 பேர் 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் அம்பேத்கர் படத்துடன் சட்டப்பேரவை வளாகத்துக்குள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் நேற்று போராட்டம் நடத்த சட்டப்பேரவை வளாகத்துக்குள் வந்தனர். ஆனால், அவர்கள் அங்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி கூறுகையில், ‘‘ ஜெய் பிம் கோஷம் எழுப்பியதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், நேற்று சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைய கூட அனுமதிக்கப்படவில்லை. டெல்லி சட்டப்பேரவை வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. ’’ என தெரிவித்தார்.














