உத்தர பிரதேசத்தில் சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மொய்த் கானின் வணிக வளாகம் நேற்று புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
2 மாதங்களுக்கு முன்பு 12 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக அயோத்தி மாவட்டத்தில் உள்ள பதர்சா நகரில் பேக்கரி நடத்தி வந்த மொய்த் கான் மற்றும் அவரது ஊழியர் ராஜு கான் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் ஜூலை 30-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பரிசோதனை நடத்தியதில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில், மொய்த் கானின் வணிக வளாகம் நேற்று புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு இயங்கி வந்த வங்கி கிளை ஒன்று வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.சோஹாவால் தாசில்தார் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஏ.கே.சைனி கூறுகையில், “மொய்த் கானின் வணிக வளாகம் அரசு நிலத்தில் கட்டப்பட்டது. எனவே அங்கீகரிக்கப்படாத கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.