செவிலியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் 18% அதிகரிக்கிறது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

0
338

இந்தியாவில் செவிலியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் 18 சதவீதமும், உலக அளவில் 100 சதவீதமும் அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் தனியார் செவிலியர்கள் கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலிக்காட்சி மூலம் பங்கேற்று ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியது:

பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டுவர். ‘கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு லாபம் சம்பாதித்து செல்பவர்கள்; அவர்களுக்கு சாதகமாக அரசு ஏன் செயல்பட வேண்டும்’ என்றும் கூறுவார்கள். ஆனால், இங்குடாடா நிறுவனம் தங்கள் சமூக பொறுப்பு நிதியிலிருந்து செவிலியர் கல்லூரிக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ளது. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.காஞ்சிபுரம் வரலாற்று சிறப்பு மிக்க ஊர். இந்த ஊரில் சங்கர மடத்தின் குரு பரம்பரை மூலம் தொடங்கப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் அதிக அளவில் படிக்கின்றனர்.

செவிலியர் படிப்புக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் செவிலியர்களின் தேவை 18 சதவீதம் அதிகரிக்கிறது. உலகளவில் இது 100 சதவீதம் அதிகரிக்கிறது. இதனால் இந்தியா மட்டுமில்லாமல், உலக அளவிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றால், அந்தமொழி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதேபோல் வெளி மாநிலங்களுக்குச் சென்றாலும் அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும். தாய் மொழியை விடக்கூடாது. ஆனால் கூடுதல் மொழியை கற்பதில் தவறில்லை.

பிரதமர் மோடி வெளிநாடு பயணம் செய்யும்போது, இந்திய மாணவர்களை சந்திக்கிறார். அப்போது பலர் மருத்துவக் கல்வி பயில வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெற்றோர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஏன் வெளிநாட்டில் சென்று கொடுத்து மருத்துவக் கல்வி பயில வேண்டும். இங்கேயே படிக்க ஏன் வாய்ப்பளிக்கக் கூடாது என்று கேட்பார்.

கடந்த 2014-ம் ஆண்டு 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இந்தியாவில் இருந்தன. இதன் மூலம் 51,348 மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவக் கல்வி பயின்று வந்தனர்.தற்போது மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையை 731 ஆக உயர்த்தியுள்ளோம். இதன் மூலம் 1,12,112 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருகின்றனர். இது 100 சதவீதத்துக்கும் கூடுதல் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here