புரோ கபடி இறுதிப் போட்டியில் டெல்லி – புனே இன்று பலப்பரீட்சை

0
26

புரோ கபடி லீக் 12-வது சீசனின் இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி – புனேரி பல்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி தியாக ராஜ் உள்ளரங்க மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

8-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற தபாங் டெல்லி நடப்பு சீசனில் லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்திருந்தது. குவாலிபயர் 1-ல் புனேரி பல்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை 34-34 என டை செய்திருந்தது. இதன் பின்னர் நடத்தப்பட்ட டை பிரேக்கரில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால்பதித்து இருந்தது. கேப்டன் அஷு மாலிக் தலைமையிலான அந்த அணி இந்த சீசனில் நெருக்கடியான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்திருந்தது.

அஸ்லம் இனாம்தாரின் தலைமையிலும், அஜய் தாக்கூரின் பயிற்சித் திறமையிலும் புனேரி பல்தான் அணி இந்த சீசனில் லீக் சுற்றில் முதலிடத்தை பிடித்திருந்தது. குவாலிபயர் 1-ல் தோல்வி அடைந்த போதிலும் அதில் இருந்து மீண்டு வந்து குவாலிபயர் 2-ல் தெலுகு டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த சீசனில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 3 ஆட்டங்களுமே டை-பிரேக்கரில் முடிவடைந்தன. இந்த ஆட்டங்களில் தபாங் டெல்லி அணி அஷு மாலிக்கின் அதிரடியான ரெய்டுகளை நம்பியிருந்தது. அதேவேளையில் புனேரி பல்தான் அணி கார்னர் பகுதியில் நிதானம் மற்றும் தடுப்பாட்டங்களால் வெற்றி பெற்றது.

தபாங் டெல்லி சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமாக பார்க்கப்படுகிறது. ஃபசல் அட்ராச்சாலி, சவுரப் நந்தல் மற்றும் அஷு மாலிக் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உயர் மட்ட செயல் திறனை வெளிப்படுத்தினால் மீண்டும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வெல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here